நண்பர்கள்

Monday, July 9, 2012

பிச்சைகார(ன்) பசி…


சிக்னலில் இளைப்பாறும் சீர்மிகு
வண்டிகள் மத்தியில்
வாளி வாளியாய்
பசியை மட்டுமே உணவாய்
உண்ட பிச்சையின் புலம்பல்

நேற்று மடுகரையில்
மாநாடு சூப்பர் பிரியாணி
கேட்காமலேயே
ஆடை இழந்தது பொட்டலம்
அரை நிர்வாணமாய் இன்று
குப்பை தொட்டியில்

தெரு நாய்கள்
பலத்தை காட்டி போட்ட
போட்டியில் தோற்றது இலை – நேற்று
வாசமாய் இருந்தது இன்று
நாற்றமாய் மூக்கில்லாதவர்களுக்கும்

இன்று எந்த கட்சி
இடத்தை அடைத்து
கொடி கட்டி சப்தம் நிறைத்து
வசை பாடி
கறிக்கஞ்சி ஊற்றும்
இப்போதே என் வயிற்றுக்கு ஆசை

வட்டிக்கு வங்கியோ வயிறோ
வேண்டாம் என்றா சொல்லும்
எட்டே முக்காலுக்கெல்லாம்
எட்டி உதைத்து எழுப்பியல்லவா
நிக்க சொல்லும்

சீக்கிரம் உனக்கான
திட்டுகளை வாங்கிகொள்
என் அன்பு எதிர் கட்சிகளே
என் இரைப்பைக்கு தெரியுமா
உன் எதிர்கால சிந்தனை

கால் கடுக்க நின்னு பார்த்து
கண்ணாடி கதவை தட்டி பார்த்து
கண்ணில் கொஞ்சம் பசியை காட்டி
கையை கொஞ்சம் இறக்கி காட்டி

காசு கேட்டும் பயனில்லை
போட ஒரு மனுஷன் இல்லை
என்னை போல இன்னும் பலர்
தட்டில்லா பிச்சை இவர்

ஒட்டும் வயிறு கொட்டும் பசி
தட்டி கொடுத்தேன் தடவி கொடுத்தேன்
சமாதானம் வேண்டாம்
சாப்பாடு வேண்டும்

நாளை காலை பசிக்கும் எனக்கு
நாலு தெருவும் போக வேணும்
தட்டு பிடிக்க சத்து வேணும்
முடிஞ்சா போடு தர்மம் நீயும்

வாய் நிறைய திட்டி தீர்த்து
கால் நிறைய உதையும் தந்து
பைசா போட வக்கில்லா
ஆட்டோகாரன் எழுதி வைப்பான்

“கவி  பாடுதைவிட
காசு போடுவது உத்தமம்”

No comments: