நண்பர்கள்

Sunday, July 22, 2012

பொய்




நெடுவென வளர்ந்த அந்த
ஒற்றை மின் கம்பம்
சொல்லியிருக்கலாம்
அவள் அடிக்கடி சாய்ந்து கொள்ளும்
கான்கிரிட் மரம் நான் தானென
சாய்ந்துகொண்டே சரிந்து போயிருப்பேன்
*
குழாயடி சண்டை பார்க்கும்
அந்த ஒற்றை அடி பம்பு
சொல்லியிருக்கலாம்
அவள் அதிகம் பிடித்தது
என் கைகளைத்தான் என்று
இது கைகள் அல்ல
கண்களென ஒற்றியிருப்பேன்
*
படையாய் பாசானை வளர்த்திருக்கும்
அந்த படிதுரையாவது
சொல்லியிருக்கலாம்
அவள் பூவுடல் படும்
தேன் நீர் என்னுடையது தானென
ஆயுள் முழுதும் தீர்த்தமாய்
தின்று  தீர்த்திருப்பேன்
*
இடுப்பு பெருத்த அந்த பச்சை மரம்
சொல்லியிருக்கலாம்
அவள் கண்ணாமூச்சி விளையாடியது
என் பின்னால்தான் என்று
என் இறுதிப்பெட்டி உன் வயிற்றால்
தான் என்றிருப்பேன்
*
கைவிடா
அரசமரத்தடி காளியம்மனாவது
சொல்லியிருக்கலாம்
அவள் மனமார வேண்டுவது
என்னை தானென்று
காலமெல்லாம் காவல் சிலையாய்
நின்று இருப்பேன்
*
பேரை சொன்னாலே பெரிய
புன்னைகை யொன்றை தரும் நீயாவது
சொல்லியிருக்கலாம்
உன்னை காதலிக்க இருந்தது நான் தானென
என் காதலி நீ என்று
என் கல்லறையில் வெட்ட சொல்லியிருப்பேன்
*
இறந்தபின் என் கல்லறையவா 
காதல் செய்ய போகிறாய்
பொய் சொல்ல
இனியாவது கற்றுக்கொள் 
காதலெனும் உண்மையாவது 
உயிருடன் இருக்கட்டும்

No comments: